Thursday 3 April 2014

முசுமுசுக்கை அடை

எங்கள் நாவல் மூலிகை உணவகத்தில் பலரும் விரும்பிக் கேட்கும் உணவு முசுமுசுக்கை அடைதான். இந்த வாரம் அதன் மருத்துவப் பயன்களைப் பார்ப்போம்.
முசுமுசுக்கைகொடி வகையைச் சேர்ந்தது. இது வயல்வெளிகளில், காடுகளில், நிலங்களில் தானாக வளரக்கூடியது. நம் முன்னோர்கள் இதன் மருத்துவக் குணத்தை அறிந்து உணவில் அடையாகச் செய்து பிள்ளைகளுக்குக் கொடுத்து சில நோய்களுக்கு மருந்தாகப் பயன்படுத்தினார்கள். சித்தர்கள் இதன் வடிவமைப்பைப் பார்த்து "இரு குரங்குகளின் கை' என அழைத்தார்கள்.
"இருமலுடனீளை யிரைப்பு புகைச்சல்
மருவுகின்ற நீர்த்தோடம் மாறுந் - திருவுடைய
மானே! முசுமுசுக்கை மாமூலி யல்விலையைத்
தானே யருந்துவார்க்குத் தான்'
இருமல், ஈளை, இரைப்பு, புகையிருமல், மூக்கால் நீர்பாய்தல் (பீனிசம்) என்பன முசுமுசுக்கையால் தீரும் என்கிறது குணவாகடம் நூல்.
புழுங்கலரிசியை நன்கு ஊறவைத்து அதனுடன் சுத்தப்படுத்திய முசுமுசுக்கை இலையைச் சிறிதளவு சேர்த்து, மிளகு, சீரகம், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு அரைத்து எடுக்கவும். இந்த மாவைத் தோசைக் கல்லில் சிறிது நெய் தடவி, அடையாகச் சுட்டுச் சாப்பிட்டு வர கோழைக்கட்டு, இருமல், தொய்வு முதலியன நீங்கும்.
முசுமுசுக்கைக்கு ஒரு விசேஷம் என்னவென்றால் உண்ட அன்றிரவே வேலை செய்ய ஆரம்பித்துவிடும். குறிப்பாக, சிலருக்கு தூக்கத்தில் அவர்களை அறியாமல் குறட்டை வரும். அதுவும் ஒவ்வொருவருக்கும் விதவிதமான சத்தத்தில் வரும். இது அவர்களுக்கு தெரியாது. ஆனால் அருகே படுத்திருப்பவர்களுக்கு வேதனையாக இருக்கும். இந்தப் பிரச்சனைக்கு இத வரை எந்த மருத்தவத்திலும் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. இதற்குக் கைகண்ட மருந்து முசுமுசுக்கை. இதை உணவில் சேர்த்துக் கொண்டால் அன்றிரவே அது குறட்டையின் அளவைக் குறைக்கும். தொடர்ந்து உணவில் சேர்த்து வந்தால் குறட்டையை உடலை விட்டு விரட்டிவிடலாம்.
அதுமட்டுமல்லாமல், அக்காலங்களில் குழந்தைகளுக்குச் சளி, இருமல், மூக்கில் நீர் வடிதல் போன்றவற்றுக்கு முசுமுசுக்கை இலையைப் பறித்துச் சாறெடுத்து வெல்லத்தில் குழைத்துக் கொடுத்தார்கள். இதையே அடையாகச் செய்து தந்து நாமும் அவர்களோடு சேர்ந்து உண்ணும்போது குழந்தைகளும் நன்கு சாப்பிட்டு சளி தொல்லையை இல்லாமல் செய்யலாம். குறிப்பாக, நுறையீரல் ஆஸ்துமாவுக்கு முசுமுசுக்கை சிறந்தது. முசுமுசுக்கை இலைக்கு மகத்துவம் இருப்பதைப் போல முசுமுசுக்கையின் வேரும் சமையல் பயன்பாட்டுக்குரியது. செரியாமை, மார்பு எரிச்சல், வாந்தி போன்ற தொல்லைகளுக்கு முசுமுசுக்கை வேரைக் கொண்டு வந்து சுத்தம் செய்து இடித்து நீரைக் காய்ச்சி அதில் போட்டு வெல்லம் கலந்து கஷாயமாகக் குடித்தால் மேற்கண்ட பிரச்னைகள் நீங்கிவிடும்.

- டாக்டர் வீரபாபு
Click Here

No comments:

Post a Comment