FROM DINAKARAN
பெரும்பாலான
நாட்டுச் சட்டங்கள் ஆணுக்குப் பெண் சமம் என்றே கூறுகின்றன. சமுதாய சிந்தனை
அப்படி இல்லை என்பதுதான் வேதனை. பெண்களுக்கான சட்டங்கள்
இயற்றப்பட்டுக்கொண்டேதான் இருக்கின்றன. சட்ட மாற்றங்கள் வந்தாலும், அவை
சமுதாய மாற்றங்களைக் கொண்டு வருவதில்லை. இது பெண்களுக்கான
சொத்துரிமையிலும் பொருந்தும். ஐக்கிய நாடுகள் அமைப்பு வெளியிட்ட ஓர்
அறிக்கையின்படி... இந்த மண்ணுலகின் மக்கள்தொகையில் பாதி அளவாக இருக்கும்
பெண்கள், மூன்றில் இரண்டு சதவிகிதம் வேலை நேரத்துக்குச் செலவிடுகிறார்கள்.
அதற்கு மாத ஊதியமாக பத்தில் ஒரு பாகம் பெறுகிறார்கள். ஆனால்,
சொத்துரிமையில் நூறில் ஒரு பாகம் மட்டுமே பெற்றுள்ளார்கள்.
இந்த
அறிக்கை உலகப்பெண்களின் உண்மையான நிலையை பறைசாற்றுகிறது. ஒரு அடி நிலத்தை
தன்னுடையது என்று கூறும் பெண்களின் எண்ணிக்கை உயரும்போதுதான் பெண்
முன்னேற்றம் அடைந்து விட்டாள் என்று கூற முடியும். சொத்து என்பது ஒரு
தனிநபர் சுயமாக சம்பாதித்த அல்லது மூதாதையரிடமிருந்து பெறப்பட்ட, அசையும்
மற்றும் அசையாச் சொத்துகளாகும். சுயமாக சம்பாதித்த சொத்தினை ஒருவர் அவர்
விருப்பப்பட்ட ஆண் - பெண் யாருக்காவது செட்டில்மென்ட் மூலமாகவோ, தானமாகவோ,
உயில் மூலமாகவோ கொடுக்க இயலும்.
ஆனால், மூதாதையர் சொத்து
விஷயத்தில் 2005ம் ஆண்டு வரை ஒரு இந்து ஆண்மகனுக்கு பிறப்பிலிருக்கும்
உரிமை, பெண்மகளுக்கு மறுக்கப்பட்டு வந்தது. இந்தியாவில் பெண்களின்
சொத்துரிமையை அவர்கள் சார்ந்த மதத்தின் அடிப்படையாகக் கொண்டு இருக்கும்
சட்டமே முடிவு செய்கிறது. Common Civil Code இன்று வரை எட்டாக்கனியாகவே
இருக்கிறது. (Sarla Màdgal V Union of India 1995) என்ற வழக்கில்
கொடுக்கப்பட்ட தீர்ப்பில், இந்திய அரசியல் சாசனத்தின் ஷரத்து 44ல்
(Directive Principles of State Policy) Common Civil Code ன் அவசியம்
நீதிமன்றத்தால் வலியுறுத்தப்பட்டுள்ளது.
அதனால், திருமணம்,
சொத்துரிமை போன்ற தனிமனித உரிமைகள் அவரவர் மதத்தின் அடிப்படையில் இயற்றும்
சட்டப்படி செயல்படுகிறது. மேலும், ஒவ்வொரு மதமும் வெவ்வேறு விதமாக
பெண்களின் நிலையை நோக்குகிறது. நம் நாட்டில் ஆங்கில ஆட்சியின் தாக்கத்தால்
அதே சட்டங்கள் சில பல மாற்றங்களுடன் இன்னும் நடைமுறையில் உள்ளன. அப்படி
பாரம்பரியம் மிக்க இங்கிலாந்து நாட்டு பெண்களுக்குமே வெகு காலம் சொத்தில்
சம உரிமை தரப்படவில்லை. Equity Courts என்று சொல்லப்படுகிற அந்த
நீதிமன்றங்களே சொத்துரிமை விஷயங்களில் முதன்முதலில் ஆணுக்கு நிகராக
பெண்களை வைத்துப் பார்த்தன.
இந்தியாவில் பெண்களின் சொத்துரிமை
நிலையை சரி செய்ய 20ம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து சில சட்டங்கள்
இயற்றப்பட்டன. The Hindu Women‘s Rights to Property Act 1937, The Indian
Succession Act 1925 போன்றவை குறிப்பிடத்தக்கவை. இந்துப் பெண் சொத்துரிமை
ஏட்டளவில் தொன்று தொட்டு பெண்கள் அசையும் மற்றம் அசையா சொத்துகளை தங்கள்
கட்டுப்பாட்டில் வைத்திருந்ததை சரித்திரத்திலிருந்து தெரிந்து கொள்கிறோம்.
எனினும், அது ஒரு ஆண்மகனுக்கு நிகரான உரிமையாக இருந்திருக்கவில்லை. ஒரு
இந்துப்பெண் கருவறை முதல் கல்லறை வரை தந்தை, தமையன், கணவர், மகன் என்று
ஒரு ஆண் உறவின் கட்டுப்பாட்டிலேயே இருக்க வேண்டிய கட்டாயம்.
இந்த
நிலை கிட்டத்தட்ட The Hindu Women's Rights to Property Act 1937
இயற்றப்படும் வரை இருந்தது. இதுவே இந்துப் பெண்களுக்கான சொத்துரிமையின்
முதல் படி. இச் சட்டம் அன்று சமுதாயத்தின் பெரும்பாலானோர் கூக்குரல்
எழுப்பியதன் மூலம் இயற்றப்பட்டதே. எனினும், இதுவே பெண்களுக்கு முழு
சொத்துரிமையையும் தந்து விடவில்லை. Widow's Limited Estate என்று
சொல்லக்கூடிய அனுபவ உரிமையை மட்டுமே தந்தது. மேலும், 1938ல் விவசாய
நிலங்களில் இருந்து பெண்களுக்கு இருக்கும் அனுபவ உரிமையை பறித்துக்கொண்டது.
இந்துப்பெண்களின்
சொத்துரிமைக்கான அடுத்த முக்கிய மைல் கல் The Hindu Succession Act 1956.
இந்துப்பெண்களுக்கு 1956க்கு முன் சொத்துரிமை என்பதில் சீதனச் சொத்து
மற்றும் சொத்துகளில் அனுபவிக்கும் உரிமை மட்டுமே இருந்தது. Women‘s Estate
என்பது அனுபவ உரிமை மட்டுமே கொண்டு கிடைக்கப்படும் பெண்ணுக்கான சொத்து.
அவ்வாறு பெறப்படும் அந்த அனுபவ உரிமை சொத்தை யாருக்கும் உரிமை மாற்றம்
செய்வது தடை செய்யப்பட்டது. மற்றும் அவளுடைய இறப்பிற்குப் பின் சொத்தின்
உரிமையாளருக்கு பிறகு இருக்கும் ஆண் வாரிசுகளுக்கு சென்றடையும்.
ஆண்மகனுக்கு
நிகராக பெண், தனது மூதாதையர் சொத்தில், உயில் எழுதப்படாத தகப்பன் வழி
சொத்தில் உரிமை கோர இயலாது. ஒரு பெண் தனது Stridhana சொத்தினை மட்டும்
உரிமை கோருவது தொன்றுதொட்டு இன்று வரை நடைமுறையில் உள்ள ஒரு வழக்கம். இந்த
இடத்தில் Stridhana என்ற வார்த்தையின் அர்த்தத்தை உச்ச நீதிமன்றம்
‘Rashmi Kumar Vs Mahesh Kumar Bhada(1997) 2 SCC 397’ வழக்கில்
விளக்கியுள்ளது. ‘திருமணத்தின் முன்னும், அந்த நிகழ்வின் போதும்
பெண்களுக்கு, அவர்களுக்காக உறவினர்களால் கொடுக்கப்படும் அசையும் மற்றும்
அசையா சொத்துகள் என்றும், அவற்றின் முழு உரிமை அந்தப் பெண்ணையே சாரும்.
மேலும்,
கணவர் அவற்றினை உபயோகப்படுத்த நேரிட்டாலும் வரும் காலத்தில் அதனை ஈடு
செய்வது அவசியம்...’ முதன்முதலாக இந்துப்பெண்களுக்கு சொத்துரிமை என்பது
கோடிட்டு காட்டப்பட்டது The Hindu Succession Act 1956ல்தான்.
அச்சட்டத்தின் 14வது பிரிவின் கீழ் முதன்முதலாக ஒரு இந்துப்பெண்மணி
வாரிசுரிமையின் மூலமாகவோ, ஜீவனாம்சத்தின் மூலமாகவோ, உறவினர் மற்றும்
உறவினர் அல்லாதவரிடம் இருந்து திருமணத்துக்குப் பிறகு கிடைக்கும்
சொத்துகள் மேலும், சொந்த முயற்சியின் மூலம் பொருளீட்டி வாங்கிய சொத்துகள்,
உயிலின் மூலமாக ஒரு பெண் பெற்ற சொத்துகள் அல்லது ஒரு சிவில்
நீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில் கிடைக்கப்பெறும் சொத்துகள் போன்ற
அனைத்துச் சொத்துகளும் பெண்களின் முழு உரிமையுடைய சொத்துகளாகக்
கூறப்பட்டுள்ளது.
இதன் மூலம் ஒரு பெண் தான் அடையும் அல்லது தன்
கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் சொத்துக்கு முழு உரிமைதாரர் ஆகிறார். இந்தச்
சட்டம் அமலுக்கு வந்த நாளுக்கு முன் இருந்தே இந்த 14ம் பிரிவு அமலுக்கு
வரும் (Retrospective Effect). இச்சட்டம் இயற்றப்பட்ட பின் பல சொத்துரிமை
வழக்குகள் நீதிமன்றத்தின் கதவுகளைத் தட்டின. நமது உச்ச நீதிமன்றம்
பெண்களின் சொத்துரிமையை நிலைநாட்டும் வண்ணமாக பல தீர்ப்புகளை வழங்கி
பெண்களின் உரிமையை நிலைநிறுத்தியது.
மேலும், இந்துக்களுக்கான
சொத்துரிமை மற்றும் வாரிசுதாரர்கள் யார் யார், பெண்களுக்கான சொத்தின் மீது
உள்ள உரிமைகள் என்ன என்பன போன்றவை The Hindu Succession Act 1956ல்
குறிப்பிடப்பட்டுள்ளன. இது போல, பெண்களுக்குக் கிடைக்கும் சொத்துகளுக்கு
அவர்களது மறைவுக்குப் பிறகு வாரிசுதாரர்களாக பிரிவு 15(1)ன்படி...
1. மகன், மகள் (அவருக்கு முன்பு இறந்த மகன்களின் வாரிசுகள்), கணவர்.
2. கணவரின் வாரிசுதாரர்கள்
3. தாய், தந்தை
4. தந்தையின் வாரிசுதாரர்கள்
5. தாயின் வாரிசுதாரர்கள் ஆகியோர் குறிப்பிடப்பட்டுள்ளார்கள்.
பிரிவு
15(2)a - ஒரு இந்துப்பெண்ணுக்கு தாய் தந்தையின் மூலம் கிடைக்கப்பெறும்
சொத்து, மகனோ, மகளோ அல்லது அவருக்கு முன்னே இறந்து போன மகனின்-மகளின்
வாரிசுகள் உயிரோடு இல்லாத பட்சத்தில் தாய் அல்லது தந்தையின்
வாரிசுகளுக்குப் போய் சேரும். பிரிவு 15(2)(b) ஒரு இந்துப் பெண்ணுக்கு
கணவர் அல்லது மாமனார் மூலம் கிடைக்கப்பெறும் சொத்து, மகனோ, மகளோ அல்லது
அவருக்கு முன்னே இறந்து போன மகனின் - மகளின் வாரிசுகள் உயிரோடு இல்லாத
பட்சத்தில் கணவரின் வாரிசுதாரர்களை போய் சேரும்.
இந்துப்பெண்களுக்கு
2005ம் ஆண்டின் சட்டத் திருத்தத்தின் மூலம் ஆணுக்கு நிகராக சொத்தில் சம
உரிமை கிடைத்தது. எனினும், சில மாநிலங்களில்... எடுத்துக்காட்டாக,
ஆந்திரப்பிரதேசம் (5.9.1985), மகாராஷ்டிரம் (22.6.1994) மற்றும் தமிழ்நாடு
(25.3.1989)ல் குறிப்பிடப்பட்ட தேதியில் இருந்தே அந்தந்த மாநிலங்களைப்
பொறுத்த வரை ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கு மூதாதையர் சொத்தினில் சம உரிமை
கொடுக்கப்பட்டது.
2005ம் ஆண்டின் சட்டத் திருத்தத்தின் The Hindu
Succession Act படி பிரிவு 29(a) மூலம் இந்த உரிமை இன்றுவரை நிலை
நிறுத்தப்பட்டுள்ளது. குறிப்பிடும்படி சமீபத்தில் 2011ம் ஆண்டு Ganduri
Koteshwaramma and another Vs Chakiri Yanadi and another வழக்கு
ஆந்திரப்பிரதேசம் உயர்நீதிமன்றத்தில் கொடுத்த தீர்ப்பின் மேல்முறையீட்டில்
மூதாதையர் சொத்தின் உரிமையில் சகோதரனுக்கும் சகோதரிக்கும் உள்ள உரிமையை
நிலைநாட்டக் கோரிய வழக்கின் தீர்ப்பில் நீதிமன்றம் ஒரு பெண்ணுக்கு,
ஆணுக்கு இணையாக மூதாதையர் சொத்தில் இருக்கும் உரிமையை நிலைநாட்டியது. இது
மட்டுமின்றி கடமையிலும் பெண்களுக்கு சரிசம பங்கு உண்டு என்று தீர்ப்பு
வழங்கியது.
இஸ்லாமியப் பெண் சொத்துரிமை
இஸ்லாமியப்
பெண்களைப் பொறுத்தவரை, பெண் என்ற காரணத்துக்காக எப்பொழுதுமே அவர்களை
சொத்துரிமையிலிருந்து விலக்கி வைத்தது கிடையாது. இஸ்லாமியச் சட்டத்தில்
வாரிசுரிமை மற்றும் மதத்தின் வாரிசுரிமையிலிருந்து வேறுபடுகிறது. இஸ்லாம்
மதத்தை பொறுத்த வரை சுயசம்பாத்திய சொத்து, மூதாதையர் சொத்து, பிறப்பின்
மூலம் உரிமை பெறும் சொத்து (Coparcenary Property), பாகப்பிரிவினை மூலம்
வரும் சொத்து என்பது போல கிடையாது.
இஸ்லாமியருக்கான சட்டம்
வெகுகாலம் எழுதப்படாத ஒரு சட்டமாக இருந்தது. நம் நாட்டை பொறுத்த வரை
Shariat Act 1937 அவர்களுக்காகச் செய்யப்பட்ட ஒரு சட்டம். அவர்கள்
Shariatல் குறிப்பிடுவது சட்டமாக ஒப்புக்கொள்ளப்படுகிறது. இஸ்லாமியப்
பெண்களைப் பொறுத்த வரை எப்பொழுதுமே ஆண்களுக்கு சமமாக சொத்தில் பங்கு கோர
இயலாது. ஒரு ஆண் வாரிசு இரண்டு பாகம் சொத்தில் பங்கு எடுக்கும் போது,
பெண்ணுக்கு ஒரு பாகமே ஒதுக்கப்படும். அவ்வாறு ஒதுக்கப்படும் சொத்து
அவர்களுக்கு உரிமையோடு ஒதுக்கப்படுகிறது. மேலும், 1956க்கு முன்பு இருந்த
இந்துச் சட்டப்படி Women's Estate போன்றவை இஸ்லாமியச் சட்டத்தில்
கிடையாது.
கிறித்துவப் பெண் சொத்துரிமை
கிறித்துவப்
பெண்களுக்கு இந்திய வாரிசுரிமை 1956 சட்டத்தின் படி சொத்து குறித்த
விளக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக இச்சட்டத்தின் 36 - 49
பிரிவுகள் கிறித்துவர்களுக்கு பொருந்தும். இந்து மற்றும் இஸ்லாமியப்
பெண்மணியை ஒப்பிடும்போது கிறித்துவ மதத்தைப் பின்பற்றும் பெண்ணுக்கு
மூதாதையர் சொத்து கோரப்படும் உரிமை மகிழ்ச்சி அளிப்பதாக இல்லை. குறிப்பாக
சொல்ல வேண்டுமானால் பிரிவு 36ன் கீழ் ஒரு கைம்பெண் மற்றும் இதர
வாரிசுதாரர் (Kindred, lineal descendant) இருக்கும் பட்சத்தில்
இறந்தவரின் சொத்தில் மூன்றில் ஒரு பாகம் கைம்பெண்ணுக்கும், மூன்றில்
இரண்டு பாகம் மற்ற நபர்களுக்கும் போய்ச் சேரும்.
அவ்வாறே நேரடி
வாரிசுதாரர் (Lineal Descendant) இல்லாமல் தூரத்து உறவு (Distant Kindred)
மட்டும் இருக்கும் பட்சத்தில் இரண்டில் ஒரு பாகம் அந்த கைம்பெண்ணின்
பாகமாக வரும். மேலும், ஒரு கைம்பெண்ணுடன் இதர வாரிசுதாரர்கள் யாரும் இல்லாத
பட்சத்தில்தான் முழுச்சொத்தையும் உரிமை கோர இயலும். ஒரு கிறித்துவக்
கைம்பெண்ணுக்கு கிடைக்கும் சொத்து வேறு வாரிசுதாரர்களின் நிலையைப் பொறுத்தே
அமைகிறது.